1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளி கொண்டாடுவது ஏன் ? - நமக்கு தெரியாத புராணக் கதைகள் – தகவல்கள்..!

1

நரகாசுரன், வதம் செய்யப்பட்ட நாளே தீபாவளித் திருநாள் என உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் தீபாவளித்திருநாள்  ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

முதலாம் நாள் சோட்டா தீபாவளி என்று சிறிய அளவில்  கொண்டாடப்படுகிறது. மறுநாள் படா தீபாவளி என்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது . மூன்றாவது  நாள் கோவர்த்தன பூஜை செய்து கண்ணனைப் பிரார்த்தனை செய்து கொண்டாடப்படுகிறது.

மூன்றாவது  நாளன்று லட்சுமியை வழிபட்டு புதுக்கணக்கு தொடங்குவது வட இந்தியர்களின்  வழக்கமாகும். இப்படி இந்தத் தீப ஒளித்திருநாள் தொடர்பாக பல தகவல்கள் - பலப்பல புராணக் கதைகள்  நமது  நாட்டின் பலப்பகுதிகளில்  சொல்லப்படுகிறது, பரவிக்கிடக்கிறது.

அவற்றில் ஒரு சிலவற்றை இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.

1. வங்காள மக்கள் தீபாவளியன்று காளி தேவிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். அழிவுத் தொழிலை மிக உக்கிரமாக மேற் கொண்ட காளிதேவியின் தணியாத உக்கிரத்தை ஆதிசங்கரர் ஒரு தீபாவளி தினத்தன்றுதான் தணித்தார்.

2. அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூபன் என அழைக்கப்படுகின்ற பிரக்ஜோதிபுரத்தை ஆண்டு வந்த பூமாதேவியின் புதல்வன் பௌமன் என்பவன் அருந்தவம் செய்து பிரமனை வழிபட்டு பெரும் வரங்களைப் பெற்றான்.

இதனால் தேவர்கள், முனிவர்கள் என்று எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். மக்களை துன்புறுத்தி வந்தமையால் இவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. இந்திரனும் இதர முனிவர்களும் இவனது கொடுமைகள் தாங்காது கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தனர்.

கிருஷ்ண பகவான் சத்தியபாமாவின் துணையுடன் நரகாசுரனை வதம் செய்தார்.

3. சமண சமயத்தைத் தொடங்கிய மகா வீரர் வர்த்தமானர் ஒரு தீபாவளியன்று மக்களுக்கு அருளுரை செய்து கொண்டிருக்கும் போதே முக்தி அடைந்தார். அருளுரை கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அவர் இறந்ததையறிந்து தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.

4. ராவணனை வதம் செய்த பின் ராமபிரான் சீதையுடன் அயோத்திக்கு திரும்பி வந்தார். அப்போது மக்கள் தீப விளக்கு ஏற்றி வரவேற்று மகிழ்ந்தார்கள் இந்த தினமே தீபாவளியாக அமைந்தது என்று கூறப்படுகின்றது.

5. ஆறுமுகன் ஆறு பொறிகளிலிருந்து ஒளிப்பிழம்பாக தோன்றியவன் அவனை உடம்பிலுள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாஹதம், ஏற்றி வழிபடுவதன் புறவடிவமே தீபாவளி என்று  கௌமார மார்க்கத்தினர் வழிபடுகின்றனர்.

6. திருமால் மூன்று உலகங்களையும் இரண்டடியால் அளந்து மூன்றாவது அடியை மகாபலியின் தலை மீது வைத்து அவனைப் பாதாள உலகில் வாழச் செய்தார்.

மகாபலி ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே பூமிக்கு வந்து போக அருள் செய்யும் படியும் அந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும்படியும் திருமாலிடம் வரமாகப் பெற்றான்.அந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

7. கபில முனிவரின் சாபம் காரணமாக சாம்பலாகிய தனது சந்ததியினர் நற்பேறடைய பகீரதன் கடுந்தவம் மேற்கொண்டான். இதன் பயனாக பூவுலகத்திற்குத் திரும்பிய ஆகாயகங்கை பரமசிவனின் திருமுடியில் தங்கினாள். கங்கை, அவளது வேகம் தணிந்த பின் மக்களின் வாழ்வை உய்விக்க பூமியை நோக்கி பாய்ந்த தினம் தீபாவளி எனவும் நம்பப்பட்டு வருகிறது.

அதனால் தான் கங்கா ஸ்நானம் செய்வது என்ற பழக்கமும் ஏற்பட்டது. மேலும் சிவனிடமிருந்து கங்கை பூமிக்குப் பாய்ந்த நேரமே பிரம்ம முகூர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது. இது அதிகாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியாகும். சாம்பலாகிய பகீரதனின் சந்ததியினர் கங்கை நதியின் புனித தண்ணீர் பட்டு நற்கதியடைந்த தினமும் இதுவாகும்.

தீபாவளி கொண்டாட்டங்கள்  கிருஷ்ணர் அவதாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது என்கிறது புராணக் கதைகள். மாநிலங்களை, பல மொழிகளை, இனங்களைக் கடந்து நம் அனைவரையும் ஒரு புள்ளியில் மகிழ்ச்சியுடன் இணைத்திருக்கிறது இனிய தீபாவளித் திருநாள்.  மகிழ்வுடன் கொண்டாடுவோம்.

Trending News

Latest News

You May Like