1. Home
  2. தமிழ்நாடு

2020ல் வல்லரசு ஆக்குவேன் என கூறி அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது ஏன் ? உதயநிதி ஆவேசம்..!

1

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆர்டிஐயில் பெற்ற தகவலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த விவகாரத்தில் வெளிவரும் புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக தோலுறித்து காட்டியுள்ளது என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக திமுகவையும் காங்கிரஸையும் பாஜகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபடாமல் வெள்ள நிவாரண நிதி வழங்காதது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தார் பிரதமர் மோடி. மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்? என்றும், 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற வாக்குறுதி எங்கே போனது?இந்தியாவை 2020ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்? என்றெல்லாம் கேள்விகளை முன்வைத்தார்.

மேலும், “கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்? வட மாநிலத்தில் அடுக்கடுக்காக 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்? மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, இந்தியாவை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளை விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்? நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?” என்றெல்லாம் உதயநிதி கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like