1. Home
  2. தமிழ்நாடு

ரஜினியை சந்தித்தது ஏன் ? சீமான் பதில் இது தான்..!

Q

நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, சீமான் அளித்த பேட்டி: ரஜினியை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அன்பான மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிவராது. அரசியலில் அவதூறுகள் எல்லாவற்றையும் தாங்க வேண்டும். களத்தில் நேர்மையாக இருப்பது நிறைய கஷ்டம். நேர்மையாக வாழ்வது உள்ளங்கையில் நெருப்பு துண்டை வைத்திருப்பதுக்கு சமமானது. நடிகர் ரஜினியுடன் நிறைய பேசினேன்; அனைத்தையும் பகிர முடியாது.
ரஜினியுடன் திரையுலகம், அரசியல் என பல விஷயங்களை பேசினேன். நல்ல தலைமை என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தற்போதுள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல; உருவாக்கப் பட்டவர்கள். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது. மக்களின் கஷ்டங்களை உணர்ந்த தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் தற்போதைய அரசியல் களத்தில் இல்லை. இன்று வாக்குகள் வாங்கப்படுகிறது. சிறப்பாக ஆட்சி நடத்துவதாக ஆட்சியாளர்களே சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
நல்ல ஆட்சி நடத்தினால் ஓட்டுக்கு காசு கொடுக்கும் தேவை இருக்காது. இங்கு சேவை அரசியல் இல்லை. செய்தி அரசியல் தான் இருக்கிறது. தேர்தல் அரசியல் தான் செய்யப்படுகிறது. மக்கள் அரசியல் செய்யப்படுவதில்லை. இதற்கு மாற்றத்தை கொண்டு வருவதற்கு தான், சிஸ்டம் ராங் என்று ரஜினி ஆங்கிலத்தில் சொன்னார்; அதை தான் நான் தமிழில் அமைப்பு தவறாக இருக்கிறது மாற்ற வேண்டும் என்று சொன்னேன். இது குறித்து தான், ரஜினியுடன் நிறைய பேசினேன். அரசியல் என்பது வாழ்வியல்; அரசியல் மீது ரஜினிக்கு ஆர்வம் உண்டு ஆனால், அவருக்கு அரசியல் சரிவராது.
விமர்சனத்தை கடக்க இயலாதவர்கள், விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை கடக்க இயலாதவர்கள் அற்ப வெற்றியை கூட அடைய முடியாது. சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று பொருள். சங் பரிவாரிலிருந்து சங்கி என்று சொல்கிறார்கள். உண்மையான சங்கி யார் தெரியுமா? எங்களை சங்கி என்று சொல்பவர்கள் தான் உண்மையான சங்கி. பிரதமரை காலையில் மகனும், மாலையில் அப்பாவும் சந்திக்கிறார்கள். எதற்கு சந்திக்கிறோம் என்று சொல்ல மறுக்கிறீர்கள்.
நான் ரஜினியை சந்தித்து பேசியது என்ன என்று சொல்கிறேன். கள்ள உறவு இல்லை. நல்ல உறவே இருக்கிறது. பிரதமரை அப்பாவும், மகனும் சந்தித்து பேசி வருகின்றனர். நீங்க எங்களை சங்கி சொல்கிறீர்கள். இது என்ன கொடுமை. தி.மு.க.,வை எதிர்த்தாலே சங்கி என்றால் இதை எப்படி சொல்வது, பெருமையாக சங்கி என்பதை நாங்கள் ஏற்க தான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்றும் பொருள் உள்ளது. இவ்வாறு சீமான் கூறினார்.

Trending News

Latest News

You May Like