1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநரே வேண்டாம்னு சொல்லிட்டு ஏன் விஜய் நேரில் போய் பார்த்தார்? சரத்குமார் கேள்வி!

1

தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மீதான அதிருப்தியின் காரணமாக, கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசும் அறிவித்தது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, தமிழ்நாடு அரசு சார்பிலோ, திமுக சார்பிலோ யாருமே ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
 

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். இதற்கு முன்பு விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று பேசி இருந்தார். இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்றதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், விஜய் இன்று ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்ணித்தார்.

அதேசமயம், பாஜக, அதிமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றன. பாஜகவின் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, சரத்குமார், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா, தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் ஆளுநரின் டீ பார்ட்டியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினர்.‌ இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சரத் குமார், "விஜய் குறித்து நான் அதிகமாக கருத்து சொல்வது இல்லை. ஆறு மாத காலம் அவர் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப்போகிறார்? கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார்? தமிழ்நாட்டை வேறொரு பாதையில் எப்படி எடுத்து செல்ல போகிறார்? அது அவரால் முடியுமா என்பதை எல்லாம் சிந்தித்துப் பார்த்து தான் பேச வேண்டும்.கொள்கை எதிரி பாஜக என்று விஜய் சொன்னாலும் எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியை எல்லாம் இன்று கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன். மாநிலத்தில் ஆளுநர் தேவையில்லை என்று விஜய் தனது முதல் மாநாட்டில் கூறினார். அப்படிச் சொன்ன விஜய் ஆளுநரை எதற்கு நேரில் சென்று சந்தித்தார் என தெரியவில்லை. நீங்கள் ஆளுநராக இருக்கக்கூடாது என நேரில் பார்த்துச் சொன்னாரா என்று தெரியவில்லை. அதிலேயே அவர் கொள்கை தெரிந்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like