டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் தொடர்பான கோப்புகளை கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது ஏன்?
அரசு அனுப்பிய கோப்பில், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் 7 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டிருந்த சைலேந்திர பாபுக்கு தற்போது வயது 61. அவர் கடந்த ஜூன் 30 அன்று தமிழக டிஜிபியாக ஓய்வு பெற்றார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவியில் ஓய்வுக்கான உச்ச வரம்பு 6 ஆண்டுகள் அல்லது 62 வயது.
இதனை சுட்டிக்காட்டி சைலேந்திர பாபு இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது மற்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று வெளியான விளம்பரத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியனவற்றை சுட்டிக் காட்டி கவர்னர் ஆர்.என்.ரவி சில கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.
அதாவது, விளம்பரம் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அவை எவ்வாறாக பரிசீலனை செய்யப்பட்டன, எதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன ஆகிய விவரங்கள் கவர்னரால் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்ட ஆணையம். இவர்கள் அனைவருமே அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 316 - 319 வரை வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு கவர்னரால் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.