1. Home
  2. தமிழ்நாடு

தங்க நகைகளை அடமானம் வைக்க இவ்வளவு சிரமங்கள் எதற்கு..? தங்கம் தென்னரசு எதிர்ப்பு!

Q

தங்க நகை அடமானம் வைப்பதில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய விதிகள் மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நகைக் கடன் புதிய விதிகள்!

அடமானம் வைக்கப்படும் தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் தான் கடனாக வழங்கப்படும்.

அடமானம் வைக்கும் நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அடமானம் வைக்கப்படும் தங்க நகை தரம் குறித்தான சான்றிதழ்களை கடன் கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். நிறுவனமும் ஒரு நகலை வைத்திருக்க வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியால் குறிப்பிடப்பட்டிருக்கும் தங்க நகை வகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும்.

இனி வெள்ளி நகைகளுக்கும் அடமானக் கடன் வழங்கப்படும்.

தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரை மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

அடமானமாக பெறப்படும் தங்க நகைகளுக்கு 22 கேரட் தங்கம் அடிப்படையில் தான் கடன் வழங்கப்படும்.

கடன் ஒப்பந்தத்தில் கடன் சம்மந்தமான அனைத்து தகவல்களும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

தங்கநகை கடனை திருப்பி செலுத்திய 7 வேலை நாள்களில் நகைகளை திருப்பி ஒப்படைக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு வேலைநாளுக்கும் ரூ 5000 பணத்தை கடன் வழங்கிய நிறுவனம் வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டும்” என்று புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.

ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் புதிய விதிமுறைகள் சாமானிய மக்களை பாதிக்கும் செயலாக அமைந்துள்ளது. குறிப்பாக நகையின் மதிப்பில் முன்பை விட 5% குறைத்து, 75% தான் கடன் வழங்கப்படும் என்ற புதிய விதிமுறை அவசர தேவைக்காக வங்கிகளை நாடிவரும் மக்களை நேரடியாகப் பாதிக்கும் முடிவாகும். அவசரம் என்று வரும் மக்களை அத்தியாவசியமற்ற விவரங்களையும், ஆதாரங்களையும் கேட்டு அலைக்கழிக்கும் இந்த புதிய நடைமுறையை மத்திய ரிசர்வ் வங்கி உடனடியாக கைவிட வேண்டும்.

அடமானம் வைத்த நகையை முழுவதுமாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய விதிமுறையைக் கடந்த மாதம் RBI கொண்டு வந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், தற்போது மேலும் புதிய 9 விதிமுறைகள் என்ற பெயரில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது, நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும். RBI உடனே இத்தகைய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like