யாருக்கெல்லாம் மகளிர் ஊக்கத்தொகை ரூ.1,000 கிடைக்காது.? அமைச்சர் எ.வ.வேலு தகவல்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் விழா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினார். அதன் பிறகு அங்குப் பேசிய எ.வ.வேலு உரிமை தொகை குறித்து முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அதாவது வசதி படைத்தவர்களுக்கு எல்லாம் ரூ. 1,000 உரிமை தொகை கிடைக்காது என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “இந்த ரூ. 1,000ஐ நம்பி தான் குடும்பம் நடத்த வேண்டும் என்ற சூழலில் உள்ளவர்களுக்கு நிச்சயம் இந்த தொகை வழங்கப்படும். அதேநேரம் வசதியானவர்களுக்கும் இது செல்வது சரியாக இருக்காது. இதன் காரணமாகத் தகுதியானவர்களுக்கு இந்த உரிமை தொகை மாதாமாதம் வரும் என்று நமது முதல்வர் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு இந்த உரிமை தொகை திட்டத்திற்குப் பல நிபந்தனைகளை விதித்துள்ளது. அதாவது ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது. மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிகாக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது.
ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். ஆண்டிற்கு 3,600 யூனிட் மேல், அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.