மாநிலங்களவையில் உள்ள இரண்டு எம்.பி.க்கள் சீட்டுகளை யாருக்கு..? லிஸ்டில் அடிபடும் பெயர்கள்...!

வரும் ஜூன் 19-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் உள்ளன. இதில், திமுக சார்பில் 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் தற்போது வரை மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை யாருக்கு வழங்கலாம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
ஆலோசனை கூட்டத்தில், அதிமுக சார்பில் உள்ள இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்கள் சீட்டை யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து 41 மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள், இந்த தேர்தலுக்காக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு விரைவில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரண்டு வேட்பாளர்கள் யார் என்று அறிவிப்பார்கள் என்று தெரிகிறது. இதில், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலர் வித்யா, செம்மலை, பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.