யாருக்கெல்லாம் கிடைக்கும்... ஆர்.ஆர்.எச். திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் முதல் 1.20 லட்சம் வரை தமிழக அரசு தருது..!

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டப்படி, பழைய அரசு குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதேபோல் வீடு இல்லாத ஏழைகளுக்கும், வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள், விதவைகளுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் அரசு தமிழ்நாடு முழுவதும் பயளானிகளை தேர்வு செய்து வீடுகளை கட்டி வழங்கி வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் எருக்கம்பட்டு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. இந்த முகாமையொட்டி 232 மனுக்கள் பெறப்பட்டு 115 மனுக்கள் ஏற்கப்பட்டிருக்கிறது. 88 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 29 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த முகாமில் 67 மனுக்கள் பெறப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முகாமில், சாதி சான்று, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், திருமண உதவித்தொகை, விதவை உதவித் தொகை என 115 நபர்களுக்கு ரூ49 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்புலெட்சுமி வழங்கி பேசினார். தொடர்ந்து வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி பேசுகையில், "வேலூர் மாவட்டத்திற்கு கடந்த 2024-ம் ஆண்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 3 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,700 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டில் 3,500 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரணாம்பட்டு தாலுகாவில் கடந்த ஆண்டு 300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறத. இந்த ஆண்டு பேரணாம்பட்டு தாலுகாவில் 370 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ள அனைத்து கலைஞர் கனவு இல்ல வீடுகளையும் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். மேலும் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீடுகள் பழுது பார்ப்பதற்கு ஆர்.ஆர்.எச். திட்டத்தின் கீழ் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கி வருகிறது.
கலைஞர் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 30 ஆண்டு காலத்திற்கு முன்பு அரசு கட்டி கொடுத்த வீடுகள் தகுதி இல்லாமல் இருந்தால் ஒன்றிய ஆணையாளரிடம் மனு கொடுத்து இந்த திட்டத்தில் பயன்பெறலாம். கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் கைத்தொழில் செய்பவர்களுக்கு வங்கி மூலம் ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1,500 மனுக்கள் பெறப்பட்டு கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் 21 காலி மனைகளுக்கு பட்டா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்" இவ்வாறு வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி கூறினார்.