ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று ஜம்மு காஷ்மீர் , ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை...!
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த செப். 18ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், செப்.25ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், அக்.1ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்த வாக்காளா்கள் சுமாா் 88 லட்சம் போ் உள்ள நிலையில், 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்புகள் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.
அதேபோல் ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட ஹரியானாவில், 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து இருமுறை வெற்றிப் பெற்று பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஹரியானாவிலும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இன்று அக்டோபர் 8ம் தேதி இந்த இரு மாநிலங்களிலும் வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அம்மாநிலங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படையினர் (சிஏபிஎஃப்) , மாநில ஆயுதப் படைக் காவல் துறையினர், மாவட்ட காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.