1. Home
  2. தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? மத்திய மந்திரி சுரேஷ்கோபி கேள்வி..!

W

தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளுக்காக ஆங்கிலேயர் பென்னி குக், சொந்தப் பணத்தில் கட்டியதுதான் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை கட்டும் போது எண்ணற்ற தமிழர்கள் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு செத்து மடிந்தனர். முல்லைப் பெரியாறு அணையால் இன்றும் பாசனம் பெறும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஒவ்வொருவரும் பென்னிகுக்கை குலதெய்வம் போல வணங்குகின்றனர். பென்னிகுக் பொங்கல் என்பது கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் வாழ்வியலில் ஒன்றாக இருந்தும் வருகிறது. ஆனால் கேரளா மாநில அரசும் கேரளா அரசியல்வாதிகளும் முல்லைப் பெரியாறு அணை கட்டி 125 ஆண்டுகளாகிவிட்டது; இந்த அணை பலவீனமாகிவிட்டது என பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது தொடர்பான வழக்குகளிலும் கூட வல்லுநர் குழுக்கள் அனைத்துமே, முல்லைப் பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டன. ஆனாலும் கேரளாவில் அரசியல் லாபங்களுக்காக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவதும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட மத்திய அரசிடம் வலியுறுத்த கேரளா அரசு முடிவு செய்திருந்தது.
இந்நிலையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ் கோபி கூறியதாவது:-
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை அண்மையில் பார்த்தேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் ஏற்படுகிறது. ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடும் கோர்ட்டு பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

Trending News

Latest News

You May Like