கொரோனா ஒழிப்பில் உலகிற்கு எடுத்துக்காட்டு தாராவி.. WHO பாராட்டு..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு மும்பை தாராவி உதாரணம் என உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,54,664ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,63,521பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்ததையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேல் அதிகரித்தாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியே சான்று என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‘உலகளவில் கடந்த 6 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் பரவல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு இத்தாலி, ஸ்பெயின், தாராவி உள்ளிட்ட சில பகுதிகள் நல்ல சான்று.
மும்பையின் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல், முறையான சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பரவலை தடுக்க முடிந்துள்ளது என்றார்.
அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
newstm.in