1. Home
  2. தமிழ்நாடு

டெல்லி கார் வெடிப்பில் தொடர்பு: யார் இந்த மருத்துவர் உமர் முகமது?

1

டெல்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு 7 மணி அளவில் வெள்ளை நிற ஹூண்டாய் கார், முதலில் மெதுவாக சென்ற நிலையில் பயங்கர சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த காரை ஓட்டி வந்த, இந்த விபத்துக்கு காரணமானவராக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. HR26CE7674 என்ற பதிவு எண்ணைக் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரின் தற்போதைய உரிமையாளர் உமர் அகமது. இதற்கு முன்னதாக அந்த காரின் உரிமையாளர்களாக பலர் இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. முகமது சல்மான் என்பவரின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரித்ததில் அவர் வேறு ஒருவருக்கு காரை விற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவரிடமிருந்து உமர், இந்த காரை பெற்றுள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரை ஓட்டி வந்த உமரை அதிகாரிகள் அடையாளம் கண்டறிந்துள்ளனர். எனினும் டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையிலேயே காரில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியது உமர் என்பதை உறுதி செய்ய முடியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உமர் முகமது 1989 பிப். 24ல் பிறந்துள்ளார். தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ளார். ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்துள்ளார். தற்போது ஃபரிதாபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

ஃபரிதாபாத் சதி திட்டம் தீட்டியவர்களுக்கும் உமருக்கும் தொடர்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பணியாற்றிய அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அடீல் அகமது ரத்தேர் மற்றும் முஸாமில் ஷகீல் ஆகிய இருவரும் 3,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் வெடிமருந்துகளை சேமித்து வைத்ததற்காக கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உமர் முகம்மது, ரத்தேருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. உமரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டதாகவும் அவர் பின்னர் ஃபரிதாபாத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஃபரிதாபாத்தில் விசாரணையின்போதே உமர் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னரே அவர் அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி காரில் ஒரு டெட்டனேட்டரை வைத்து செங்கோட்டை அருகே நெரிசலான பகுதியில் பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளதாக நம்பப்படுகிறது. உமரின் தாயார் உள்பட அவரது குடும்பத்தினர் 3 பேரை போலீசார் விசாரணைக்கு காவலில் எடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like