பிரதமர் வேட்பாளர் யார் ? ராகுல் காந்தியின் பதில் இது தான்..!
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “கடந்த 2004-ல் செய்தது போல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “அச்சம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள். கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் யாரும் அஞ்ச மாட்டார்கள்.
எங்கள் தலைவர்களான சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் அச்சம் இல்லை. ஆனால், பிரதமரிடம் அச்சம் இருக்கிறது. எங்கள் கட்சியில் இருந்து சிலரை எடுத்துக்கொண்ட பிறகு தற்போது 400+ பற்றி பிரதமர் பேசுகிறார். அவரால் உலகம் முழுவதற்கும் செல்ல முடியும்; ஆனால் மணிப்பூருக்குச் செல்ல முடியாது. ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றார். ஆனால், பிரதமரால் ஏன் முடியவில்லை? ஏனெனில் அவர் அச்சத்துடன் இருக்கிறார். யார் அச்சத்துடன் இருக்கிறார்களோ அவர்களால் நாட்டை நடத்த முடியாது” என தெரிவித்தார்.