இரட்டை இலை யாருக்கு? ஒரு வாரத்தில் முக்கிய உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதாவது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்ட தொடர்பாகவும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரைக்கும் பல்வேறு புகார்கள் அளித்திருந்தார்.
அதிலும் குறிப்பாக உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரைக்கும் அதிமுகவுக்கு அந்த இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு அளித்திருந்தார்.
ஆனால் அந்த மனு மீது இதுவரைக்கும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த மனு மீதான தலைமை தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்க செய்திருந்தார்.
இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்த இந்த மனு மீது இதுவரைக்கும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
அதிமுகவினுடைய பிரதான சின்னமான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.