யார் அந்த தியாகி? பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..!

தமிழக சட்டசபையின் இன்றைய நிகழ்வின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் அந்த தியாகி யார்? என பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வருகை தந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரை அடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இவ்வாறு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதில், தமிழ்நாட்டில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகவும், டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது; டாஸ்மாக் அலுவலர்களுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியது; கொள்முதலை குறைத்து கணக்கு காட்டியது; பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் உயர் அலுவலர்கள், மதுபான நிறுவனங்களிடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாகவும், டாஸ்மாக் உயர் அலுவலர்களின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டது.
போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தான் டாஸ்மாக் ஊழல் குறித்து திமுக அரசை விமர்சிக்கும் வகையில் "அந்த தியாகி யார்?" என்ற வாசகம் பொறித்த பேட்ச்சை சட்டையில் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்துள்ளனர்