யாருக்கு ரஜினிகாந்த் ஆதரவு..? அண்ணன் சத்தியநாராயணா பேட்டி
உலக நாடுகளே இந்தியாவை வியந்து பாா்க்கும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்- 3 திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சாதித்துக் காட்டியுள்ளனர். சந்திரயான்- 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருபவா் விழுப்புரத்தைச் சோ்ந்த பி.வீரமுத்துவேல்.
இந்த நிலையில் சந்திரயான்- 3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேலின் தந்தையிடம் தங்கள் மகன் திட்ட இயக்குநராக இருந்து செயல்படுத்திய சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம், உலகளவில் இந்தியாவுக்கு பெருமை கிட்டியுள்ளது. அதில், தங்கள் மகனின் பங்கு அளப்பரியது என்று அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேலுவின் தந்தை பி.பழனிவேல் - தாய் ரமணி ஆகியோரை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணன் நேற்று நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அப்போது, நாட்டிற்கு பெருமைத் தேடி தந்த மகனை பெற்ற நீங்கள் நீண்ட ஆயுளோடு அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வதாக சத்தியநாராயணன் தெரிவித்தார். அப்போது, ரஜினி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
உலகமே போற்றும் சாதனையைச் செய்த வீரமுத்துவேலின் பெற்றோரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ரஜினிகாந்தின் அனுமதியுடன் இங்கு வந்துள்ளேன். வீரமூத்துவேலுவும், அவரை இந்த உலகுக்குத் தந்த அவரது பெற்றோரும் நீண்டு ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ஜெயிலர் படத்தை மக்கள் அனைவரும் சென்று ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து லால் சலாம் வருகிறது. அதற்கு அடுத்த படம் குறித்து ரஜினி பிறகு அறிவிப்பார்.
யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுவது ஆரம்பத்திலிருந்து ரஜினியின் பழக்கம். பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தத் தேர்தலிலும் யாருக்கும் ரஜினி ஆதரவு தர மாட்டார். இவ்வாறு சத்திய நாராயணராவ் தெரிவித்தார்.