யாரம்மா நீ ? 40 பேரை ஏமாத்தி கோடிகளில் புரண்ட ஈரோடு பெண்..!

ஈரோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 46 வயதாகும் அழகர்சாமி என்பவர் அந்த பகுதியில் நிதி நிறுவனமும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இதன் பங்குதாரராக அழகர்சாமியின் மகள் மாரியம்மாள் என்கிற கனகா ஸ்ரீ (26) இருக்கிறார். அழகர்சாமியிடம் கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு பெரியசேமூர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் பாலு என்பவர் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்தார். ஏலச்சீட்டு நிறைவடைந்தும் அவருக்கு அழகர்சாமி பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாலு மீண்டும் அழகர்சாமியிடம் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் ஏலச்சீட்டில் சேர்ந்திருக்கிறார். இதனிடையே தொடர்ந்து பாலு பணம் கேட்டதால் தந்தையும், மகளும் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்துக்கான 2 காசோலைகளை வழங்கியுள்ளார்கள்.. ஆனால் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலு இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அழகர்சாமி மற்றும் மாரியம்மாள் இருவரும் அங்கீகாரம் இல்லாத ஏலச்சீட்டு நடத்தி பாலுவிடம் ரூ.7 லட்சத்து 49 ஆயிரத்து 500 மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதேபோல் 40-க்கும் மேற்பட்டவர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியம்மாள் என்ற கனகாவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கனகாவின் தந்தை அழகர்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.