1. Home
  2. தமிழ்நாடு

திருமணத்திற்காக பார்க்கும் 10 பொருத்தங்களில் எந்தெந்த பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்?

1

திருமண வாழ்க்கை  நன்றாக அமைய வேண்டுமானால் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது தொன்று தொட்டே நம் மக்களிடையே இருந்தே வருகிறது.

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் பத்து பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சில பொருத்தங்கள் இல்லாவிட்டால் அந்த ஜாதகத்தினை இணைக்காமல் தவிர்த்து விடுவது நல்லது. பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருந்தாலும் ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும்.

பத்துப்பொருத்தங்களில் தினம், கணம், மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசி அதிபதி,வசியம், ரஜ்ஜூ, வேதை ஆகியவைகளில் முக்கியமான பொருத்தங்கள் சரியாக அமையவேண்டும். மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு. அந்த பொருத்தங்கள் இல்லாவிட்டால் திருமணம் செய்யக்கூடாது.

தம்பதியர் இருவருமே ஆரோக்கியத்துடன வாழ தினப்பொருத்தம் அவசியம். அதே போல குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு, பாசம் எப்படி இருக்கும்? சயன, சுக,போக பாக்கியத்தை இருவரும் அனுபவிக்க கணப்பொருத்தம் இருக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி ஒற்றுமையாக இருப்பதற்கு ராசிப்பொருத்தம் இருக்க வேண்டும்.

தம்பதிகளிடையே உறவு கணவன் மனைவிக்கிடையே உள்ள ஈர்ப்பு,அன்பு ஆகியவை குறித்து அறிவது வசியப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது.வசியப் பொருத்தம் சிறப்பாக இருக்கும் தம்பதிகளுக்கு இடையே தாம்பத்ய வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மணமக்கள் தாம்பத்ய உறவில் திருப்திகரமாக இருப்பார்களா? என்பது யோனிப் பொருத்தம் மூலம் கணிக்கப்படுகிறது. கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை குறிப்பது யோனி பொருத்தம் முக்கியமானது. ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது.

ரஜ்ஜுப்பொருத்தம் கணவன் மனைவி நீண்ட காலம் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் பாக்கியத்தை தரக்கூடியது. அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் தலை முதல் பாதம் வரை நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒரே ரஜ்ஜுவில் வரக்கூடாது. அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும்.

திருமணம் முடிந்து குழந்தை பேறு குறித்து கணிக்கப்படுவது மகேந்திரப் பொருத்தம் என அழைக்கப்படுகிறது. புத்திரபாக்கியத்திற்கு இந்த பொருத்தம் அவசியம். சிலருக்கு பத்து பொருத்தம் இருக்கிறது என்று பார்த்து திருமணம் முடித்து வைத்தால் சிலரது வாழ்க்கை பிரிவில் முடிகிறது. பத்து பொருத்தம் பார்ப்பதோடு ஆண் பெண் ஜாதகத்தில் என்னென்ன சரியாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

குடும்ப ஸ்தானம் எனப்படும் 2ஆம் இடம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம் வலிமையாக இருக்க வேண்டும். தம்பதியர் ஒற்றுமை, குடும்பம் சந்தோசமாக அமைய இவை முக்கியம். குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களின் சேர்க்கை, பார்வையும் சுபமானதாக இருக்க வேண்டும். ஐந்தாம்பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் சரியாக இருக்க வேண்டும். அடுத்த சந்ததியை நிர்ணயம் செய்யப்போவது அந்த பாவகம்தான்.

அதேபோல ஆறாம்பாவம் எனப்படும் நோய் கடன் ஸ்தானம், 8ஆம் பாவகம் எனப்படும் ஆயுள், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருக்க வேண்டும். பொருளாதார முன்னேற்றம், தம்பதியர் ஒற்றுமை திடீர் அதிர்ஷ்டம் பற்றி சொல்லும் இடங்கள். இதேபோல 12ஆம் பாவகம் வலிமை பெற வேண்டும். தம்பதியர் இடையே அந்தரங்க வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இத்தனை பார்த்து முடித்த திருமணங்கள் தோல்வியில் முடிந்தால் அது அவரவர்களின் முன்வினைப் பயன்தான்.

* தினப்பொருத்தம்:

ஓர் பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணிக்கை இருந்தால், தினப்பொருத்தம் இருக்கிறது என்று பொருள். அசுவினி நட்சத்திரத்துக்கு  2-வது நட்சத்திரம் பரணி, 4-வது நட்சத்திரம் ரோகிணி ஆகியவை பொருத்தமானவை. தினப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.

*கணப்பொருத்தம்:

27 நட்சத்திரங்களையும் தேவ கணம், மனித கணம், ராக்ஷஸ கணம் என மூன்றாகப் பிரிக்கலாம். மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. தேவகணம், மனித கணம் ஆகிய பிரிவில் உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண், பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனலாம். 

ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால் கணப்பொருத்தம் கிடையாது. தேவ கணம் மனித கண நட்சத்திரங்களுக்கு ராக்ஷஸ கண நட்சத்திரங்கள் பொருத்தமாக இருக்காது.

*மகேந்திரப்  பொருத்தம்:

புத்திரப் பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய பொருத்தம் மகேந்திரப் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக  அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் இருக்கிறதென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:

பெண்ணின்  ஜன்ம நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணினால், 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் இருக்கிறது எனக் கொள்ள வேண்டும்.

*யோனிப் பொருத்தம்:

திருமண வாழ்வில் இணைந்தபின் தம்பதியிடையே நிலவும்  இல்லறம் பற்றி கூறும் பொருத்தம் யோனிப் பொருத்தம். ஒவ்வொருவரின்  நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கினம் குறிக்கப்படுகிறது. ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினங்களைச் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

*ராசிப் பொருத்தம்:

பெரும்பாலும் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்யும் நடைமுறை இன்றளவும் பல குடும்பங்களில் உள்ளது. மணப்பெண்ணின்  ராசியிலிருந்து மணமகனின் ராசி எண்ணிக்கை 2 முதல் 6 வரை இருந்தால் திருமணத்தைத் தவிர்ப்பார்கள். பெண்ணின்  ராசி மேஷம் என்றால், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு. 

*ராசி அதிபதி பொருத்தம்:

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாகத் திகழ்கின்றார். நவகிரகங்களில் ராகு, கேது தவிர்த்து மீதமுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள்  ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள். 

ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும்  நட்பு  அல்லது சம நிலை என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. 

ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் பகை, நட்பு என்ற நிலையும் சம நிலை பகை என்றாலும் ராசி அதிபதி பொருத்தம் கிடையாது.

*வசியப் பொருத்தம்:

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வசியப் பொருத்தம் பார்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆண், பெண் இருவரும் ஒருவரை மற்றவர் அனுசரித்துச் செல்லும் மனோபாவத்துக்குக் காரணமாக அமையும். மேஷத்துக்கு சிம்மம், விருச்சிகமும் ரிஷபத்துக்கு கடகம், துலாமும் மிதுனத்துக்கு கன்னியும் கடகத்துக்கு விருச்சிகம், தனுசும் சிம்மத்துக்கு மகரமும் கன்னிக்கு ரிஷபமும், மீனமும் துலாமுக்கு மகரமும் விருச்சிகத்துக்கு கடகம், கன்னியும் தனுசு -  மீனம்

மகரத்துக்கு கும்பமும் கும்பத்துக்கு மீனமும் மீனத்துக்கு மகரமும் வசியப் பொருத்தம் உள்ளவை.

*ரஜ்ஜு பொருத்தம்: ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம் என்றும் கூறுவார்கள். சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு,  நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு,பாத ரஜ்ஜு  என ஐந்து வகை ரஜ்ஜு உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது.  எனவே,  முக்கியப் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.

* வேதைப் பொருத்தம்:

வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். பரஸ்பரம் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும் தன்மை உள்ளவை.  இதுவும் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய பொருத்தமாகும். எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மணமுடிக்க வேண்டும்..

அசுவினி - கேட்டை, பரணி - அனுஷம், கார்த்திகை -  விசாகம், ரோகிணி - ஸ்வாதி, திருவாதிரை - திருவோணம், புனர்பூசம் - உத்திராடம், பூசம் - பூராடம், ஆயில்யம் - மூலம், மகம் - ரேவதி, பூரம் - உத்திரட்டாதி, உத்திரம் - பூரட்டாதி, அஸ்தம் - சதயம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றுக்கொன்று வேதை.

பத்துப் பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் சரியாக இருக்கின்றன எனப் பார்க்க வேண்டும். அவற்றுள் முக்கியமான பொருத்தங்களான, தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வேதைப் பொருத்தம் மற்றும் ரஜ்ஜு பொருத்தம் ஆகியவை முக்கியமாகப் பார்க்கவேண்டிய ஜாதகப் பொருத்தங்கள். ஆகவே, இந்தப் பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று நன்கு பார்த்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இப்படி அமையும் திருமண வாழ்வில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதே நம் நம்பிக்கை. 

Trending News

Latest News

You May Like