அடுத்த ரவுண்டுக்கு தயாராக வேண்டிய நேரம் வந்து விட்டது - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்..!
மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராக வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பல்வேறு முன்னறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை. டெல்டாவிலிருந்து, வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கனமழை இருக்கும். அதே சமயம் சமாளிக்க கூடிய அளவிலேயே இருக்கும். நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் 11, 12 ஆகிய தேதிகளில் கனமழை இருக்கும்.
தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் டிசம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், இருப்பினும் வட கடலோர மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு இருக்காது. தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை.
காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா வழியாக அரபிக்கடலுக்கு செல்லும் போது மேற்கு மாவட்டங்களுக்கும், உள் மாவட்டங்களுக்கும் மழை இருக்கும்.
டிசம்பர் 16 - 18இல் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். கிறிஸ்துமஸ் வரை தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து மழை இருக்கும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழ்நாடு 50.செ.மீட்டரை கடக்கும். சென்னை 100 செ.மீட்டரை மீண்டும் இந்த பருவமழை காலகட்டத்தில் கடக்ககூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 10 முதல் 13 வரை கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவதால் படிப்பில் கவனம் செலுத்துங்கள். விடுமுறைக்காக எதிர்பார்க்க வேண்டாம். அந்தந்த பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தால், தொடர்ந்து மழை பெய்யும் சூழல் இருந்தால் மட்டுமே மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் எனவே படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளை நன்றாக எழுதுங்கள் என்று கூறியுள்ளார்.