ராகுல் காந்தி பேசுகிற இடமெல்லாம் இந்தியாவுக்கு விரோதமாக பேசுகிறார் : எச்.ராஜா..!
சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்டவேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு இருக்கிறது. ஏனென்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதற்காக, கர்நாடகாவில் இருந்து வந்திருக்கும், எஸ்சி அணியின் தமிழக பொறுப்பாளர் வெங்கடேஷ் மவுரியா, செப்.24-ம் தேதி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, செப்.30-ம் தேதி தமிழகம் முழுவதும் இண்டியா கூட்டணியை எதிர்த்து, பாஜக எஸ்சி அணி, ஓபிசி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளிநாடு சென்றபிறகு, அவருடைய ஒருசில நிகழ்ச்சிகள் மட்டுமே வெளிப்படையாக தெரியப்படுத்தப்படுகிறது. மற்றபடி, ராகுல்காந்தி வெளிநாடுகளில் யாரையெல்லாம் சந்திக்கிறார், யாரை தொடர்பு கொள்கிறார் என்பது தெரியப்படுத்தப்படுவதில்லை.
ராகுல் காந்தி பேசுகிற இடமெல்லாம், இந்தியாவுக்கு விரோதமாக பேசுகிறார். சீனாவுடன், காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. காங்கிரஸ் அந்நிய நாட்டுடன் என்ன ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரியுமா? ராகுல் காந்தி எதற்காக இந்திய விரோத சக்திகளை சந்திக்க வேண்டும்? எனவே, ராகுல் காந்தியின் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இல்ஹான் ஓமருடன் காங்கிரஸ் கட்சிக்கு என்ன உறவு இருக்கிறது? இல்ஹான் ஒமரை சோமாலியாவுக்கே அனுப்ப வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் ஜனநாயகத்தை மதிப்பதில்லை. இலங்கை அரசுடன் இந்தியா எப்போதும் நட்புறவை பேணும். இவ்வாறு அவர் கூறினார்.