7 மணிக்கு வர வேண்டிய டாக்டர் 10 மணியை கடந்தும் வரவில்லை..! நடிகர் கஞ்சா கருப்பு சரமாரி கேள்வி..!

மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகர் கஞ்சா கருப்பு, தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.
இதனிடையே, இன்று அவருக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்படவே, நடிகர் கஞ்சா கருப்பு போரூரில் உள்ள மாநகராட்சியின் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு காலை 7 மணிமுதல் மருத்துவராக காத்திருந்த நிலையில், மருத்துவர்கள் 10 மணியை கடந்தும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமான கஞ்சா கருப்பு மற்றும் அவருடன் இருந்தவர், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு எதிராக குரல் எழுப்ப தொடங்கினர்.
மருத்துவர் எங்கே? எப்போது வருவார்? என பலமுறைகேட்டும், மருத்துவமனை பணியாளர்கள் உரிய பதில் சொல்லவில்லை. காலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பெற்றோர், மூதாட்டி ஒருவர், தலையில் காயத்துடன் சிறுவன், நாய்கடியுடன் சிறுவன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்களும் சிகிச்சைக்காக காத்திருந்து இருக்கின்றனர். மருத்துவமனையில் உடல்நலக்குறைவுடன் காத்திருந்ததில், மூதாட்டிக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது.
மருத்துவர்கள் யாரும் பணிக்கு வராத காரணத்தால், கஞ்சா கருப்பு ஊடகத்தினருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இதன்பேரில் மருத்துவமனையில் பணியாளர்கள் இல்லாத சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், மருத்துவரே இல்லாத அறையில், ஏசி மட்டும் இயங்கிக்கொண்டு இருந்ததாகவும் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் மருத்துவர்கள் பணியில் இல்லாத அதிருப்தியை வெளிப்படுத்தினர்.