'பாரத் அரிசி' எங்கு கிடைக்கும்? ஆன்லைனில் வாங்க முடியுமா?
இந்தியாவில் ஒருபக்கம் பருவமழை பொய்த்துப் போனதாலும், மறுபக்கம் கனமழை, வெள்ளம் காரணமாக நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் அரிசி விலை வெளிச்சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், ‘பாரத் அரிசி’ விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி, பாரத் அரிசி ஒரு கிலோ ரூபாய் 29- க்கு விற்பனை செய்யப்படுகிறது; ஐந்து மற்றும் பத்து கிலோ பாக்கெட்டுகளில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மலிவு விலை அரிசியை எங்கு வாங்கலாம்..?
இந்தியாவில் கடந்த ஓராண்டில் தானியங்களின் ரீடைல் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியில் உணவு பணவீக்கம் முக்கியப் பங்கீட்டை வகிக்கும் வேளையில் இதைச் சரி செய்ய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மக்களுக்கு 'பாரத் அரிசி' விற்பனையைத் தொடங்க முடிவு செய்தது.
பாரத் அரிசி மொபைல் வேன்கள் மற்றும் NAFED, NCCF, Kendriya Bhandar ஆகிய மூன்று மத்திய கூட்டுறவு நிறுவனங்களின் விற்பனை முனையங்களில் மக்கள் நேரடியாக வாங்கிக்கொள்ள முடியும். மேலும் இது விரைவில் இ-காமர்ஸ் தளங்கள் உட்படப் பிற சில்லறை தங்களிலும் கிடைக்கும்.
மத்திய அரசு ஏற்கனவே பாரத் ஆட்டா மற்றும் பாரத் தால் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தியது. தற்போது “பாரத் ஆட்டா” என்ற பெயரில் கோதுமை மாவு கிலோ ரூ.27.50க்கும், “பாரத் தால்” என்ற பெயரில் வெள்ளை கொண்டைக் கடலை கிலோ ரூ.60-க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.