இதற்கு தீர்வு எப்போ வருமோ : சென்னையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், மத்திய படை உடை தயாரிப்பு தொழிற்சாலையின் (ஓ.சி.எப்) குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களான மோசஸ் மற்றும் தேவன் ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.
அப்போது தொழிலாளர்கள் இருவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகினர். இதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தொட்டியில் இருந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொழிலாளர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி தொழிலாளர்கள் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து ஆவடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.