நாடு முன்னேறுவது எப்போது..?: பிரதமர் மோடி பேச்சு..!
நாடு முன்னேறுவது எப்போது..?: பிரதமர் மோடி பேச்சு..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில், கங்கா விரைவு சாலைக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி இன்று நாட்டினார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேவப் பிரசாத் மவுரியா மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர், கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் முன் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, “மீரட், ஹாப்பூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், படான், ஷாஜகான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
600 கி.மீ. தொலைவுடைய நீண்ட விரைவு சாலைக்காக ரூ.36 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. கங்கா விரைவு சாலை இந்தப் பகுதியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரும். சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
உத்தரப் பிரதேசம் முழுவதும் வளர்ச்சி அடையும் போது நாடு முன்னேறும்; எனவேதான், அரசின் கவனம் உ.பி.யின் வளர்ச்சியில் உள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைகளையும் மற்றும் பல்வேறு புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும். அடுத்த தலைமுறைக்கான உட்கட்டமைப்புடன் கூடிய நவீன மாநிலமாக உ.பி. அடையாளம் காணப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

உ.பி.யில் விரைவு சாலைகள், புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருதல், புதிய ரயில் வழிகள் அமைக்கப்பட்டு வருதல் ஆகிய இணைந்த பணிகள் உ.பி.யின் மக்களுக்கு அடுத்தடுத்து பல்வேறு ஆசிகளை கொண்டு வரும். விமானப்படையின் விமானங்கள் அவசர காலத்தில் புறப்பட்டு செல்வதற்கும் மற்றும் தரையிறங்கவும் வசதியாக 3.5 கி.மீ. தொலைவுக்கு கட்டுமான பணிகள் நடைபெறும்.
உ.பி.யில் இன்று காணப்படும் நவீன உட்கட்டமைப்பானது வளங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டுள்ளது என எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்பு, பொதுமக்களின் பணம் எப்படி பயன்பட்டது என்று நீங்கள் கண்டிருப்பீர்கள். ஆனால் இன்று, உங்கள் பணம் உங்கள் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறது” என்று கூறினார்.
Next Story