சொத்துன்னு வந்துட்டா அண்ணன் என்னடா தம்பி என்னடா...

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பழனிவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (60). இவருக்கும் அதே ஊரில் வசித்துவரும் அவரது தம்பி துரைசிங்கத்திற்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடிய நிலையில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்தினசாமி தன்னுடைய வீட்டின் மேல் தளத்தில் மழைநீர் வெளியேற தகர கூரை அமைத்து கொண்டிருந்தார். அந்த கூரையில் இருந்து வடியும் நீரானது துரைசாமியின் வீட்டிற்குள் விழும்படியாக அமைத்ததால் அங்கு சென்று துரைசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த துரைசிங்கம் அண்ணன் என்றும் பாராமல் ரத்தினசாமியை வீட்டின் மேல் தளத்திலிருந்து வேகமாக தள்ளியுள்ளார். இதனை எதிர்பாராத ரத்தினசாமி நிலைகுலைந்து தடுமாறி சுற்றுச்சுவர் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரத்தினசாமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது, மனைவி மற்றும் மகள்கள் கூச்சலிட்டு கதறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ரத்தினசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேவிபட்டினம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் துரைசிங்கம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.