தவெகவின் மாநாடு எப்போது? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!
தமிழக வெற்றிகழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இதற்கு அனுமதி கேட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், விக்கிரவாண்டி காவல்துறையிடம் கடிதம் வழங்கியிருந்தார்.
இதையடுத்து காவல்துறை தவெகவிடம் 21 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டிருந்தது. மேலும் 5 நாட்கள் அவகாசமும் வழங்கியிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர், மாநாடு நடத்துவதற்கு முழு வீச்சில் தயாராகினர்.தவெகவின் விளக்கத்தை தொடர்ந்து 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் ஏற்கனவே நடத்துவதாக திட்டமிடப்பட்டிருக்கும் 23ஆம் தேதிக்கு இன்னும் ஏறக்குறைய 10 நாட்களே இருக்கும் நிலையில், மாநாட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பதால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என இன்று அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கடந்த பிப்ரவரி மாதம் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் வழங்கியதாக மகிழ்ச்சி செய்தியை தனது தொண்டர்களுடன் விஜய் பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் மாநாட்டு தேதியையும் விஜயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறிவந்தனர்.
மாநாடு எப்போது நடக்கும் என்ற தேதியை இன்று விஜய் தனது அறிக்கை வாயிலாக அறிவிப்பார் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். ஏற்கனவே அறிவித்த 23ஆம் தேதியே மாநாடு நடத்தப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.