மருத்துவத் துறையில் பணி நிரந்தரம் எப்போது..? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

 | 

சென்னை வந்துள்ள மத்தியப் பிரதேசத்தின் மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங், இன்று (21ம் தேதி) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் மத்தியப் பிரதேச அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலை குறித்து மத்திய பிரதேச மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஸ்வாஷ் கைலாஷ் சாரங் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர், தமிழ்நாடு மருத்துவமனை கட்டமைப்பை பார்வையிடவுள்ளார்.

பொதுமக்களுக்கு இதுவரை 1,83,56,631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது. கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை. 2 கோடி தடுப்பூசி வரை தற்போது வந்துள்ளது. இன்னும் 10 கோடி தடுப்பூசிகள் தேவை.

கடந்த ஆட்சியில் தடுப்பூசி கேட்பதிலும், பொதுமக்களுக்கு செலுத்துவதிலும் தாமதம் இருந்தது. ஒரு கோடி கூடுதல் தடுப்பூசிகள் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்திருந்தார். அது தொடர்பாக எதுவும் இதுவரை தெரியப்படுத்தவில்லை. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை.

மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின் முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ளவர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்றார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP