1. Home
  2. தமிழ்நாடு

இந்த வருடம் ஆடிப்பெருக்கு எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

1

ஆடிப்பெருக்கு தமிழர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த ஆடிப்பெருக்கு குறித்து பண்டைய இலக்கியமான சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நன்னாளில்தான் விவசாயிகள் விவசாய பணிகளைத் தாெடங்குவார்கள். அதையே ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழியாகவும் கூறியுள்ளனர். மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருக்கும் இந்த சமயத்தில் விவசாயிகள் நாற்று நடவும் பணியை இந்த ஆடிப்பெருக்கில்தான் தொடங்குவார்கள். இந்த நாளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணியைத் தொடங்குவதாலே இந்த நாளை தமிழர்கள் தங்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத நாளாக கொண்டாடுகிறார்கள். 

ஆடிப்பெருக்கு எனும் ஆடி 18 வரும் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நாளில் இந்த சிறப்பு வாய்ந்த நாள் வருகிறது. அந்த நாளில் விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரம் இணைந்து வருகிறது. இது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அனுஷம் நட்சத்திரம் சனி பகவானுக்கு மிகவும் உகந்தது என்பதால் இந்த நன்னாளில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம் ஆகும். 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். புதுமண தம்பதிகள் ஆடிப்பெருக்கு நன்னாளில் தாலிக்கயிறு மாற்றுதல் வைபோகமும் நடக்கும். புதியதாக திருமணம் செய்த தம்பதியினர் இந்த நாளில் புது தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். இதை மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். 

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த நாளில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடப்பதால் பக்தர்கள் குவிவது வழக்கம். இந்த நன்னாளில் காவிரி ஆற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீராடுவார்கள். இதனால், பாவங்கள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும். 

புராணம் சொல்வது என்ன?

பலரும் பாவங்களை போக்கிக் கொள்ளும் கங்கை கிருஷ்ணரிடம் சென்று தன்னுடைய பாவத்தை எப்படி நீக்குவது? என்று வேண்டி கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு கிருஷ்ண பகவான் காவிரி ஆற்றில் கலக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. பகவான் விஷ்ணு மகிழ்ச்சியாக காட்சி தரும் ஸ்ரீரங்கம்,  ஸ்ரீரங்கப்பட்டினம் சிவ சமுத்திரம் ஆகிய இடங்களுக்குச் சென்று ரங்கநாதரை வணங்கியது. இதுவே ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like