திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது...கண் கலங்கிய ஸ்டாலின்..!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தன்னுடைய 63வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமாவுக்கு, கமல் அளித்த தங்கமுலாம் பூசிய வெள்ளி சங்கிலி பரிசு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் திருமாவளவனின் வாழ்க்கையில் ஒரு சோகம் நடந்துள்ளது. பிறந்தநாள் தினத்திலேயே திருமாவளவனின் சித்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனது சிற்றன்னை செல்லம்மாள் (78) சற்றுமுன் இயற்கை எய்தினார். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்துள்ளார். பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார் என்பது பெருந்துயரமளிக்கிறது. பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்.
வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய். நான் பட்ட வகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கியிருந்தார். எப்போதாவது நான் ஊருக்குச் செல்வேன்.
அப்போது என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய். இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது. அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025) என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை. அம்மாவுக்கு எனது வீரவணக்கம்." என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், "ஆழ்ந்த இரங்கல். அன்புச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.
சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும் - அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் - உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன். அன்புச் சகோதரர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.