என்ன நடந்தாலும் மக்கள் மனதில் இருந்து ராமரை நீக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஸ்ரீராமரும் தமிழகமும் இணை பிரியா பந்தம் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, புத்தகத்தை வெளியிட்டார். அப்போது ஆளுநர் ரவி பேசியதாவது:-
நாடு முழுவதும் பயணித்து சிறிது நேரம் ஒதுக்கி மக்களுடன் பேசி பாருங்கள்.. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொரு இன்ச் இடத்திலும் ராமர் இருப்பது உங்களுக்குப் புரிந்து விடும். தர்மம் இல்லை என்றால் ஒற்றுமை இருக்காது.. சனாதன தர்மம் என்பது ஒற்றுமை குறித்தே பேசுகிறது. நீங்கள் என்ன செய்தாலும் இந்திய மக்களின் மனதில் இருந்து ராமரை நீக்க முடியாது. அப்படி ஒரு வேளை யாராவது ராமரை நீக்க முயன்றால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது.
ராமர் வடநாட்டுக் கடவுள் என்ற கருத்தைத் தமிழ்நாட்டில் சிலர் திட்டமிட்டுக் கட்டமைத்துள்ளனர். இதனால் நமது இளைஞர்கள் கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை இழந்துள்ளனர். இந்த நாட்டை இணைக்கும் சக்தியாகப் பசையாக ராமர் இருக்கிறார். மொழி, இனம் கடந்து அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் ராமர் இருக்கிறார். நம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக ராமர் இருக்கிறார். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.