யூடியூபர் இர்ஃபான் செய்தது செய்தது பெரிய விஷயமில்லை... கொலை குற்றம் அல்ல: அமைச்சர் மா. சுப்பிரமணியன்!
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவமனையில் 13 கோடி செலவில் இரண்டாவது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்கமாக ஒரு ஸ்கேன் எடுக்க 40 நிமிடங்கள் ஆகும். புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் 20 நிமிடத்திற்குள் எடுக்க முடியும்.
நேற்று(நவ. 11) மாலையில் 4 மையங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தனர். இரண்டு இடங்களில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் தராமல் இழுப்பறி செய்யும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீதும் புகார் இருந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்திகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கின்றது. கோவை அரசு மருத்துவமனைக்கு 4500 பேருக்கும் அதிகமாக வருகின்றனர்.
யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் செய்தது கொலை குற்றமில்லை. அவர் செய்தது பெரிய விஷயமில்லை. தனியார் மருத்துவமனை 10 நாள்கள் மூடப்பட்டது. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.