திடீரென வங்கிகள் மூடிவிட்டால் அதில் டெபாசிட் செய்த பணம் என்ன ஆகும்..!

RBI கூறும் நிபந்தனைகளுக்கு ஏற்பதான் வங்கிகள் இயங்க வேண்டும். அப்படி ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட வங்கியின் லைசன்ஸ்-ஐ ரத்து செய்து விடும். அப்படித்தான் சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் மீது தடை விதித்துள்ளது.
சிலருக்கு லட்சக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப்பட்டது குறித்து கவலையும் ஏற்படலாம். ஒரு வங்கியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டால் அதற்கு சில நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதிக்கும். அப்படித்தான் இந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இருக்காது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஒரு சில நேரங்களில் எந்த வித பிரச்சினையும் இல்லை என்று தெரிந்தால் ஆர்பிஐ மீண்டும் தடையை தளர்த்தும் வாய்ப்பும் உள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட 97,000-த்திற்கும் அதிகமான வங்கிகள் இருக்கின்றன. இன்றெல்லாம் கிட்டத்தட்ட அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது அத்தியாவசியமானதாக இருக்கிறது. மக்கள் தங்களுடைய பணத்தை சேமித்து வைப்பதற்காக ஏதேனும் ஒரு வங்கியிலாவது கணக்கு தொடங்கி வைத்திருக்கின்றனர்.
வங்கிகள் மூடப்பட்டாலோ அல்லது வங்கியின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டாலோ வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்தை (DICGC) உருவாக்கியுள்ளது. வங்கி மூடப்பட்ட பிறகு இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்கும்.
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திடீரென மூடப்பட்டு விட்டால் உங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான பணம் கிடைக்கும். ஒருவேளை நீங்கள் இதைத் தாண்டி டெபாசிட் செய்து இருந்தாலும் இதுதான் வரம்பு. அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும் இதே நடைமுறைதான் உள்ளது. இந்தியாவில் இதற்கு முன்னர் இந்த வரம்பு ரூ.1 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆனால் 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இதில் சில விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் 10 லட்ச ரூபாயை டெபாசிட் செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதற்கும் ரூ.5 லட்சம் தான் வரம்பு. ஒருவேளை நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்திருந்தால்.. அதற்கு நீங்கள் டெபாசிட் செய்த தொகை அப்படியே திருப்பித் தரப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.