தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது செய்ய வேண்டியவை..? செய்யக்கூடாதவை..? சென்னை மாநகர காவல்துறை அறிவுரை..!
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது.
* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் பசுமை பட்டாசுகளை காலை 7-8 மணி வரை, இரவு 7-8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும்.
*சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.
* பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
* பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.
*பட்டாசு விற்கும் கடைகளுக்கு அருகே சென்று புகைப் பிடிக்கவோ பட்டாசு வெடிக்கவோ கூடாது, ஈரமான பட்டாசுகளை சமையலறையில் உலர்த்த கூடாது.
*பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.
* கால்நடைகளுக்கு அருகில் சென்று பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடி, நடந்து செல்பவர்கள் மீது முட்டி விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும்.
* கையில் பட்டாசுகளை வைத்துக்கொண்டு, கொளுத்திப்போடுவது மிக மிக ஆபத்தான விஷயம். இம் மாதிரி பட்டாசு வெடிக்கையில்தான், உடலில் அதிகளவு பாதிப்பு ஏற்படும்.. அதனால் கையில் வைத்து பட்டாசு கொளுத்துவதை தவிருங்கள்.
* விபத்து ஏற்பட்டால் காவல்துறை அவசர உதவி எண் 100, தீயணைப்பு உதவி எண் 101, ஆம்புலன்ஸ் உதவிக்கு 108, தேசிய உதவி எண் 112 உள்ளிவற்றை அழைக்கலாம்.
* தீக்காயத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதாலோ அல்லது தண்ணீருக்குள் கை, கால்களை முக்குவதாலோ கொப்பளம் உண்டாகலாம். கொப்பளங்கள் வந்தாலும் பயப்பட வேண்டாம். அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.
* எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.
* ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.
* பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.
* எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.
* பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
* பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.
* பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.
* பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.
* கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்பொழுது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.
* தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொள்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், கனம் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடும்படி சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.