இடி, மின்னல் வரும் போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?
இடி விழும்போதும், மின்னல் தாக்கும்போதும் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி மின்னலின் போது என்ன செய்ய வேண்டும்?
- இடி விழும் சத்தம் மற்றும் மின்னல் அடிப்பது போன்று தெரிந்தால், உடனடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
- பெரும்பாலும் வீட்டிலிருந்து வெளியே வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- வீட்டின் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை உடனடியாக மூட வேண்டும்.
- குழந்தைகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மேலும், தொலைக்காட்சி, மொபைல் சார்ஜிங் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை மின்சாரத்துடன் இணைத்திருப்பதை துண்டிக்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் இடி மற்றும் மின்னலின் போது வெளியில் இருந்தால், பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு பெரும்பாலும் மெட்டல் ஷீட் இல்லாதவாறு உள்ள இடத்தில் இருக்க வேண்டும்.
- முக்கியமாக, மரங்களுக்கு கீழ் மின்னல் தாக்களின் போது நிற்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மரங்களில் நேரடியாக இடி மின்னல் தாக்கி தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது.
- ஒருவேளை நீங்கள் சைக்கிள், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தால், உடனடியாக பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதேநேரம், நீங்கள் படகு சவாரியிலோ அல்லது நீச்சல் அடித்துக் கொண்டிருந்தாலோ உடனடியாக நிலத்திற்கு திரும்ப வேண்டும். காரணம், கடலில் அல்லது தண்ணீரில் மின்னல் தாக்கினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- மேலும், இடி மற்றும் மின்னல் ஒருவரை தாக்கினால் அவருக்கு முடிந்த அளவு முதலுதவி செய்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
இடி மின்னலின் போது என்ன செய்யக்கூடாது?
- மொபைல் சார்ஜிங் மற்றும் தொலைக்காட்சி உட்பட மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- குளிப்பது, அதிலும் ஷவரில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
- மின்னணு சாதனங்கள் மற்றும் அடுப்பு உள்ளிட்ட தீப்பற்றும் இடங்களில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.
- இடி மின்னலின் போது கனமழை பெய்து கொண்டிருந்தால், தாழ்வான பகுதிகளில் இருக்கக் கூடாது. உடனடியாக, மேடான பகுதிகளுக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.