1. Home
  2. தமிழ்நாடு

ஏசி மின்சார ரயில் எத்தனை மணிக்கு புறப்படும்..? எந்தெந்த ரயில் நிலைங்களில் நிற்கும் தெரியுமா ?

1

சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியாக ஏசி மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து தான் பயணிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட 2 மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்து கடந்த பிப்ரவரி மாதமே சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கூடிய விரைவில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. குறிப்பாக கோடைக்காலத்துக்கு முன்பு ஏசி மின்சார ரயில் சேவை சென்னையில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில் எப்போது புறப்படும்? எந்தெந்த ரயில் நிலையங்களில் எல்லாம் நின்று செல்லும் என்பது குறித்தான உத்தேச தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

* ஏசி மின்சார ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டு கடந்த மாதமே 12 பெட்டிகள் கொண்ட 2 ஏசி மின்சார ரயில்கள் சென்னை மண்டலத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஏசி மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்றபடியே 3,798 பேரும் என மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த ஏசி மின்சார ரயிலானது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும். 

* முதலில் இந்த ஏசி மின்சா ரயில் தாம்பரம் பணிமனையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். காலை 6.45 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். இதன்பிறகு சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு 7.48 மணிக்கும், செங்கல்பட்டுக்கு காலை 8.35 மணிக்கும் சென்றடையும். 

* இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 3.45, இரவு 7.35 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு மாலை 4.20, இரவு 8.30 மணிக்கும், செங்கல்பட்டுக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும். சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டும் செல்லும். 

* இதேபோன்று மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து காலை 9.00 மணி, மாலை 5.45 மணிக்கு புறப்படும் ஏசி மின்சார ரயில், தாம்பரத்துக்கு காலை 9.38 மணி, மாலை 6.23 மணிக்கும், சென்னை கடற்கரைக்கு காலை 10.30 மணி, இரவு 7.15 மணிக்கும் செல்லும்.

எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும் 

* சென்னை புறநகர் பாதையில் ஏசி மின்சார ரயில் பயணிக்கும் போது, வழக்கமாக சாதாரண ரயில்களில் உள்ளது போலவே கடற்கரை - தாம்பரம் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். 

* தாம்பரத்தில் இருந்து அதிகாலையில் கடற்கரைக்கு புறப்படும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு வரும் போதும் இந்த ரயில்கள் புறநகர் பாதையில் இயக்கப்படும். 

* மற்ற நேரங்களில் செல்லும் போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

* ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில்கள் இயக்கப்படாது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டும் தான் இந்த சேவைக்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like