காலமாகிவிட்ட அம்மாவின் திருமாங்கல்யத்தை என்ன செய்ய வேண்டும்..?
காலமாகிவிட்ட அம்மாவின் திருமாங்கல்யத்தை என்ன செய்யவேண்டும் என்பதில் நிறையபேருக்கு குழப்பங்கள் இருக்கின்றன.
திருமாங்கல்யம் என்பது மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடிய இடம். ஆதிகாலத்தில் திருமாங்கல்யம் என்றால் ஒரு மஞ்சள் கயிற்றில் - மஞ்சள் கிழங்கை கட்டி வைத்து தாலி கட்டினார்கள். ஆதிகாலத்தில் இன்னொரு விஷயம்... ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தாலி என்பது இருந்தது என்கிற வரலாறுகள் உண்டு.
பிற்காலச் சூழலில் அதாவது, தங்கம் புழக்கத்திற்கு வந்த பிறகு தங்கத்தில் தாலி செய்து தாலி கட்டினார்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும்.
சைவ மரபில் இருப்பவர்களுக்கு சிவலிங்கமோ அல்லது அம்பாளோ இருக்கும். வைணவ மரபில் இருப்பவர்களுக்கு திருமண் அல்லது துளசி மாடம் இருக்கும். ஒவ்வொரு சமூகத்திற்கும் இப்படியான மாறுபாடுகள், தாலியில் உண்டு.
தாலி அணிந்துகொண்டிருந்த பெண்மணி இறந்துவிட்டால், அந்தத் தாலி யாருக்கு உரியது? இதுதான் நம்மில் பலருக்கு இருக்கிற முக்கியமான சந்தேகம்.
இறந்துபோன பெண்மணியின் தாலி என்பது, அவருக்கு மகள் இருக்கும் பட்சத்தில், அந்தத் தாலி மகளுக்குத்தான் சேர வேண்டும். மகள் இல்லை, மகன் மட்டுமே உண்டு என்றால், அது மகனின் மனைவிக்கு அதாவது மருமகளுக்கு போய்ச் சேர வேண்டும் என்பதே விதியாக இருந்தது.
இங்கே ஒரு விளக்கத்தைச் சொல்லியாகவேண்டும்.
இறந்துபோனவரின் திருமாங்கல்யத்தை, திருமாங்கல்யமாகவே பயன்படுத்தக் கூடாது. அதாவது, தாலியை தாலியாகப் பயன்படுத்தக் கூடாது.
அதேபோல், தாலியை, அதாவது திருமாங்கல்யத்தை அப்படியே மோதிரமாகப் பயன்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன், தாலியையே மோதிரமாக அணிந்திருப்பாரே! ஆனால் இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்கிறது சாஸ்திரம்.
இறந்தவர் அணிந்திருந்த திருமாங்கல்யத்தின் தங்கத்தை உருக்கி, அதை வேறுவிதமாக, வேறு வடிவமாக, மோதிரமாகவோ, டாலராகவோ, அவ்வளவு ஏன்... புதிதாகத் திருமாங்கல்யம் செய்யும் தங்கத்துடன் கலந்து இணைத்தோ, செய்து அணிந்துகொள்ளலாம்.
திருமாங்கல்யம் என்பது குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்தத் திருமாங்கல்யத்தை உருக்கி, வேறொரு ஆபரணமாக அணிந்துகொள்வதில் தவறேதும் இல்லை. இதனால், குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இல்லாமல் போகும் என நினைப்பதும் தவறு.
மேலும் முக்கியமான விஷயம்... தாலி என்கிற குரு, சுக்கிர ஆதிக்கத்துடன், பித்ருவாகிவிட்ட இறந்தவரின் தாலியை வேறொரு ஆபரணமாக அணியும் போது, அதனால் இறந்தவரின் பரிபூரண ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்!
எனவே, இறந்தவரின் திருமாங்கல்யத்தை, திருமாங்கல்யமாகவே பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே உத்தமம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.