1. Home
  2. தமிழ்நாடு

கமல் சொல்வது உண்மையிலும் உண்மை... சீமான் நச் பதில்..!

1

நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்ததாக தெரிவித்து இருந்தார். இதற்கு கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். மேலும், தக் லைஃப் திரைப்படத்தைக் கன்னடத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினர்.

இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் மாபெரும் பொருட்செலவில் உருவான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு விளக்கமளித்த நடிகர் கமல்ஹாசன், தாம் பேசியதில் தவறு இல்லை என்றும், வரலாற்றை ஆதாரமாக கொண்டு தான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், "நான் சொன்னது அன்பினால் சொல்லப்பட்டது, நிறைய வரலாற்றாசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்தவில்லை. தமிழ்நாடு என்பது ஒரு மேனன் முதலமைச்சராகவும், ஒரு ரெட்டி முதலமைச்சராகவும், ஒரு தமிழர் முதலமைச்சராகவும், ஒரு கன்னட ஐயங்கார் முதலமைச்சராகவும் இருந்த மாநிலம்.


அரசியல்வாதிகள் மொழியைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள். நான் உட்பட அவர்களுக்கு அதைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. இந்த மிக ஆழமான விவாதங்கள் அனைத்தையும் வரலாற்றாசிரியர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொழி நிபுணர்களிடம் விட்டு விடுவோம்" என்று கூறினார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உண்மையை உணராத கூட்டம் தன் இன வரலாற்றை அறியாதவர்களாக இருக்கின்றனர். இதைப் பேசி பயனில்லை. 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழிலில் இருந்து சமஸ்கிருதம் கலந்து பேசி, பிரிந்தது தான் கன்னடம். தென் மாநிலங்களில் கன்னடம் பிரிந்தது. அதன் பின் 1600-இல் தெலுங்கு வருகிறது. 1500-களில் அதாவது 15-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தான் மலையாளம் என்கிற சொல் உருவாகிறது. அதன்பின் துளு.


"கன்னடமும் களி தெலுங்கும் மலையாளமும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதிரத்தில் உதித்தவை" என தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடல் உள்ளது. அதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நீக்கி விட்டார். இவர்கள் எல்லாம் வருத்தப்படுவார்கள் என்பதற்காக அந்த வரிகளை கருணாநிதி நீக்கி விட்டார். ஆனாலும் உண்மையைப் பேசியே ஆக வேண்டும்.

கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் அம்மா, அப்பா, அக்கா என்றுதான் சொல்கிறார்கள். தமிழில் இருந்து கிளைத்து துளிர்த்த மொழிகள் தான் இவை. வரலாறு தெரிந்தவர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள்.

கமல்ஹாசன் பேசியது உண்மையிலும் உண்மை. சொல்லப் போனால், சத்தியத்திலும் சத்தியம். அங்குள்ள மொழியியல் ஆய்வறிஞர்கள், தொல்லியல் ஆய்வறிஞர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் ஆகியோருக்கு கமல்ஹாசன் பேசியது உண்மை என நன்றாக தெரியும். ஆனால் உண்மை தெரியாமல் கமல்ஹாசனை கன்னடர்கள் எதிர்க்கின்றனர். அவர் கூறியது உண்மைதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

Trending News

Latest News

You May Like