இது என்ன புது ட்விஸ்ட்..! பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான்.. கூட்டணி ஆட்சி இல்லை - எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி,
பாஜக - அதிமுக கூட்டணியை திமுக விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது என்றும் நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் இஷ்டம் என்ற எடப்பாடி பழனிசாமி, எங்கள் கூட்டணியை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை தகுதி இல்லை என்றும் காட்டமாக கூறினார். மேலும் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை எல்லாம் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான், கூட்டணி ஆட்சி இல்லை என்றார். மேலும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தினார்.
கடந்த வாரம் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறிய நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது