இது என்ன நியாயம்..! உதயநிதியை வரவேற்க கோயில் பணம் செலவிடுவதா?: எச்.ராஜா!
உதயநிதி ஸ்டாலினை பழநி முருகன் மாநாட்டில் பேச வைத்தனர். ‘‘இது ஆன்மிக மாநாடு அல்ல’’ என்று அவர் பேசுகிறார். அப்படியென்றால், அதற்கு ஏன் கோயில் நிதியை செலவு செய்தனர். கோயில் நிதியை எடுத்து அரசியல் மாநாடு நடத்துகின்றனர். கோயில் நிதியை திமுக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் வரும் 7-ம் தேதி தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சாவூரில் உள்ள அனைத்து கோயில்களின் நிதியில் இருந்தும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். கட்சி தலைவரை வரவேற்க, கட்சி நிதியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டுமே தவிர, கோயில் பணத்தை தொடக்கூடாது. கோயில் பணத்தை தொட அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அதிகாரமும் கிடையாது.
திமுக கொள்கைகளையே விஜய் மீண்டும் மீண்டும் சொல்கிறார். அவரது கட்சியின் தீர்மானங்களை பார்க்கும்போது, திமுகவில் அவர் சேர்ந்து கொள்ளலாம் என சொல்ல தோன்றுகிறது. திமுக போலவே நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முதலில் எவ்வாறு அது செயல்பாட்டில் இருக்கிறது என்பதை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.