1. Home
  2. தமிழ்நாடு

ஒரு விஷயம் நடந்ததற்கு பிறகு வீராவேசமாக பேசுவது என்ன பயன் - அண்ணாமலை..!

1

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீஸில் சரணடைந்தனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்குவதற்கா ஆம்ஸ்ட்ராங்கை தாங்கள் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்று ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னைக்கு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இன்று பதவியேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் அருண், "சென்னை எனக்கு புதிய இடம் கிடையாது. இங்கு நான் பல பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறேன். ரவுடிகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவாரகள். ரவுடிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதிலளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டிற்கு இன்று சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த நிருபர்களை அவர் சந்தித்தார். அப்போது, சென்னைக்கு புதிய காவல்துறை ஆணையராக பதவியேற்றுள்ள அருணின் பேச்சு குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, "அண்ணா.. இந்த ஆவேச பேச்சு எல்லாம் இங்கு தேவை இல்லைங்கண்ணா. ரவுடிக்கு ரவுடி பாஷையில் பேசப்படும்; என்கவுன்ட்டர் செய்வோம் என்ற பேச்சே அவசியமற்றது. தமிழ்நாடு ஒரு போலீஸ் ஸ்டேட் ஆக மாறுவதில் எனக்கு விருப்பம் கிடையாது.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும், அவர்களுக்கு வரும் அச்சுறுத்தல்களையும் கண்காணிக்க தனித்தனி போலீஸ் பிரிவு இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்குக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் இருப்பதை அவர்களுக்கு எப்படி தெரியாமல் போனது? அதை பற்றி ஆணையர் விசாரிக்க வேண்டும். ஒரு விஷயம் நடந்ததற்கு பிறகு, நாங்கள் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்று சொல்வதை விட, நடப்பதற்கு முன்பு அதை தடுக்கும் வகையில் காவல்துறையை தயார்படுத்த வேண்டும்" என அண்ணாமலை கூறினார்.

Trending News

Latest News

You May Like