இது என்ன நியாயம் : விரைவு பஸ்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் சாதாரண பஸ்களில் வசூல்..!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் கட்டணத்தை எவ்வித முன் அறிவிப்புமின்றி தி.மு.க. அரசு உயர்த்தி உள்ளது ஏழை, எளிய மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சாதாரண பஸ்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 58 பைசா மட்டுமே தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்ததால் வசூலிக்கப்பட வேண்டும்.
ஆனால், இதையும் தாண்டி 75 பைசா பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. ஒரு கிலோ மீட்டருக்கு 75 பைசா என்கிற கட்டணம் என்பது விரைவு பேருந்துகளுக்கு மட்டுமே. அதாவது விரைவு பஸ்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் சாதாரண பஸ்களில் வசூலிக்கப்படுகிறது.
அரசு பஸ்களில் பயணம் செய்வோர் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்ற நிலையில், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இது கண்டிக்கத்தக்கது. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, அரசுப் பஸ்களில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், விரைவுப் பஸ்களில் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை சாதாரண பஸ்களில் வசூலிப்பதை நிறுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.