என்ன செய்ய போகிறது அரசு ? விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி ,வல்லாளபட்டி , நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்யும் வரை முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி ,வல்லாளபட்டிட ,எட்டிமங்கலம் ,புலிப்பட்டி, மாங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில் நேற்று மாலை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி பகுதியில் மட்டும் இந்த சுரங்கத்தை விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் சுரங்கம் அமைக்க மறு ஆய்வு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி பொதுமக்கள் அரிட்டாபட்டி தவிர்த்து மற்ற கிராமங்களில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன வாய்க்கால்கள் முழுமையாக சேதப்படுத்தப்படும் என்பதால் வெள்ளலூர், உறங்கான்பட்டி, கோட்டநத்தம் பட்டி உள்ளிட்ட கடைமடை பகுதிக்கு செல்லக்கூடிய தண்ணீர் முழுமையாக தடைபட்டு தங்களது பகுதி விவசாயம் கேள்விக்குறியாக்கப்படும்.
இந்த டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு இப்பகுதியில் செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ஏலம் முற்றிலும் ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். மேலூர் தனியார் திருமண மண்டபத்தில் சங்கத்தின் செயலாளர் ரவி தலைமையில் கூட்டம் நடைபெற்றது . இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர். இறுதியாக ஒன்றிய அரசு டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை தங்களது போராட்டத்தை தொடர்வது எனவும் முடிவு செய்துள்ளனர்.