இரு தரப்பு புகார் என்ன? நடிகர் கஞ்சா கருப்பு Vs வீட்டு ஓனர்

நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகரில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு முதல், மாதம் ரூ.20 ஆயிரம் வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுத் தங்கியுள்ளார்.
சென்னையில் சினிமா ஷூட்டிங் நடக்கும் போதெல்லாம் கஞ்சா கருப்பு இங்குத் தங்கியுள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘கஞ்சா கருப்பு, ரூ.3 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளார்.
மேலும், வீட்டை வேறொரு நபருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளார். மதுபானம் மற்றும் தகாதநடைமுறைகளை மேற்கொண்டு வீட்டை லாட்ஜ் போல மாற்றி விட்டார். இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததார்’ எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், கஞ்சா கருப்பும் ஆன்லைன் வாயிலாகப் போலீஸில் புகார் அளித்தார். அதில் வீட்டின் உரிமையாளர், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளார்.
கலைமாமணி விருது, ரூ.1.50 லட்சம் உள்ளிட்டவை காணாமல் போய்விட்டதாகக் கூறியுள்ளார். இரு தரப்பு புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.