‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’ என்றால் என்ன? தப்பிப்பது எப்படி?
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் தங்களை சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சுங்கத் துறை அதிகாரிகள் போல அடையாளம் காட்டிக் கொள்வார்கள். மேலும், இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களை தொலைபேசி அழைப்பு வழியே தொடர்பு கொள்வார்கள். பெரும்பாலும் இந்த அழைப்புகள் இணையவழியில் மேற்கொள்ளப்படும். பின்னர் வீடியோ அழைப்பில் இணையுமாறு சொல்வார்கள்.
பெரும்பாலும் நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற குற்றச்சாட்டுகளை சொல்லி, தங்களிடம் கைது செய்வதற்கான வாரன்ட் இருப்பதாக மறுமுறையில் இருப்பவரை மோசடியாளர்கள் மிரட்டுவார்கள். அவர்கள் மோசடியாளர்கள் என்பதை கொஞ்சம் கூட அடையாளம் காண முடியாத வகையில் அவர்களது செயல்பாடு தொழில் முறை நேர்த்தியுடன் இருக்கும். இதன்மூலம் அவர்கள் அசல் அதிகாரிகள் என நம்பச் செய்வார்கள்.
இந்தக் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க தாங்கள் உதவுவதாக சொல்வார்கள். வழக்கில் இருந்து பெயரை நீக்க, விசாரணையில் உறுதுணையாக இருப்பதாகச் சொல்லி குறிப்பிட்ட வங்கிக் கணக்கு அல்லது யுபிஐ மூலம் பணம் அனுப்புமாறு சொல்வார்கள். பணத்தை பெற்றதும் அவர்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது. அதன் பிறகே தாங்கள் மோசடியாளரிடம் பணத்தை இழந்துள்ளோம் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் அறிவார்கள்.
தப்பிப்பது எப்படி? - பொதுவாகவே மோசடிகளில் இருந்து தப்பிக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையவழியில் இயங்குபவர்கள் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதிலிருந்து தப்பிக்க சில சில டிப்ஸ்:
- அரசின் விசாரணை அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒருபோதும் பணம் அல்லது வங்கி சார்ந்த விவரங்களை கேட்க மாட்டார்கள்.
- அவர்கள் கொடுக்கும் அழுத்தம் மற்றும் அவசர நிலைக்கு வேகம் காட்ட வேண்டாம்.
- இந்த மாதிரியான சூழலில் பயம் கொள்ள வேண்டாம்.
- விசாரணை அதிகாரி என பேசுபவர் மீது சந்தேகம் இருந்தால் அவர் குறிப்பிடும் துறையின் அலுவலகத்தை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டு பெறலாம்.
- அரசு அதிகாரிகள் வாட்ஸ்அப், ஸ்கைப் போன்றவற்றை தொலைத்தொடர்புக்கு பயன்படுத்துவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்பில் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த விவரங்களை பகிர வேண்டாம்.
- மோசடி என சந்தேகம் இருந்தால் உள்ளூர் காவல் துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.
- இந்த மோசடியில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டியது அவசியம் என இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-In) என தெரிவித்துள்ளது.
இந்த மோசடியால் பணத்தை இழந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன? - டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் செய்ய வேண்டியது குறித்து பார்ப்போம்.
- பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வங்கியை தொடர்பு கொண்டு வங்கி கணக்கை முடக்க வேண்டும்.
- cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் தளத்தில் புகார் அளிக்க வேண்டும்.
- வழக்கறிஞரின் உதவியை அணுகலாம்
- தொலைபேசி அழைப்பு விவரங்கள், பண பரிவர்த்தனை சார்ந்த விவரங்கள், மெசேஜ்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வசம் உள்ள ஆதாரங்களை பத்திரப்படுத்த வேண்டும்.