1. Home
  2. தமிழ்நாடு

பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!

1

இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தற்போதும் பல படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். இவரது பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த, இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என கோர்ட் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை விதித்தனர். படத்தின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் சம்பளம் வழங்கிவிட்டார். அதன்படி அதன் உரிமை தயாரிப்பாளருக்கு சென்றுவிடும் அதன் அடிப்படையில் தயாரிப்பாளர்களிடம் இருந்து உரிமை பெற்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வக்கீல், இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் சம்பந்தப்பட்டது. இதற்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள். வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அந்த வகையில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பாடல்கள் விற்பனை மூலம் இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இளையராஜா பாடல்கள் தொடர்பாக பாடலாசிரியர்கள் உரிமை கோர வாய்ப்புள்ளதா என்பதை பற்றி தங்களுடைய விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதன் பின்னர் வழக்கின் விசாரணையை ஜூன் 2 ஆம் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Trending News

Latest News

You May Like