அஜித் குமாருக்கு நடந்தது என்ன? தெரியவந்த பகீர் உண்மை..!

அஜித் குமார் உயிரிழந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையின் போது கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை, நீதிபதிகள் S.M.சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அப்போது, நகை திருட்டு தொடர்பாக புகார் கொடுத்த நிகிதா, ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் எனவும், அதனால் தான் முறையாக விசாரணை நடத்தாமல் இளைஞர் தாக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிட்டார்.
அப்போது, காவல்துறையிடம் ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கவில்லை என்றும் சிசிடிவி பதிவு செய்யக்கூடாது என்பதற்காக வெளி இடத்தில் வைத்து அடித்தார்களா எனவும் காட்டமாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக கூறிய நீதிபதிகள், 44 இடங்களில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு உடல் முழுவதும் அஜித்குமார் தாக்கப்பட்டுள்ளதாகவும், முகத்திலும், பிறப்புறுப்பிலும் மிளகாய் பொடி தூவி துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இது சாதாரண கொலை வழக்கு போல் இல்லாமல், கொடூரமாக இருப்பதால் நீதிமன்றம் இந்தவழக்கை மிகவும் தீவிரமாக பார்ப்பதாக குறிப்பிட்டனர். மேலும், மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது என்றும் வேதனை தெரிவித்தனர்.