காலையில் நடந்த சோகம்..! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்!
ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது, 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக கோடாட் டிஎஸ்பி ஸ்ரீதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இவரது கூற்றுப்படி, காரில் வந்த குடும்பத்தினர் தேவாலயம் ஒன்றிற்கு செல்வதற்காக, ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா நோக்கி ஓட்டுநர் உட்பட 10 பேர் காரில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், காரானது கோடாட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு பழுது காரணமாக நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி, சந்திர ராவ் (50), அவரது மனைவி மணிக்யாமா (45), கிருஷ்ணா ராஜு (26), அவரது மனைவி ஸ்வர்ணா (23), சந்திரராவின் மருமகன் ஜில்லா ஸ்ரீகாந்த் (32) மற்றும் ஸ்ரீகாந்தின் நான்கு வயது மகள் லாசியா ஆகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், ஸ்ரீகாந்தின் மனைவி படுகாயங்களுடன் கோடாட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கிருஷ்ணா ராஜுவின் மகன் மற்றும் ஸ்ரீகாந்தின் இளைய மகள் லாவண்யா ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் கோடாட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் கோடாட் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 A கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், தவறான இடத்தில் லாரியை நிறுத்தி வைத்திருந்ததாக, லாரி ஓட்டுநர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோடாட் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.