கூவத்தூரில் என்ன நடந்தது? யார் யாருக்கு என்ன பேரம் பேசப்பட்டது? கருணாஸ் உடைக்கும் கூவத்தூர் சீக்ரெட்...

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் தனியார் யூ-டியூப் சேனலில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
எடப்பாடி பழனிசாமிக்கு யாரிடம் எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும்.
கூவத்தூரில் நடந்தது என்ன?
அவரை தலைவராக தேர்வு செய்தவுடன் அங்கிருந்த அனைவரிடமும் பேசி சரிகட்டினார். என்னிடமும் பேசி அவருக்கு ஆதரவாக நிற்கும் படி செய்து விட்டார். தற்போதைய அரசியல் சூழலில் தான் பல்வேறு தியாகங்களை செய்து கட்சியில் மிக உயர்ந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளேன் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இதையெல்லாம் வைத்துக் கொண்டு தான் கூவத்தூரில் முதலமைச்சராக தேர்வு செய்தார்களா? யார், யாருக்கு என்னென்ன என்று பேசி தானே ஓகே வாங்கினீர்கள்.
சிறைக்கு புறப்படும் முன்பாக சசிகலா பேசிய வார்த்தைகள், ”என்ன ஆனாலும் நான் பார்த்து கொள்கிறேன். நமக்கு கட்சி முக்கியம். ஆட்சி முக்கியம்” என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள். நம்பிக்கை துரோகம். உங்களை நம்பி தானே சசிகலா சிறை சென்றார்கள். அவருக்கு இப்படி ஒரு செயலை செய்யலாமா? அப்போது பாஜக கையில் சிக்கியது தான் அதிமுக. இன்று வரை அவர்கள் கைகளிலேயே தான் உள்ளது.
கூவத்தூரில் என்ன நடந்தது? யார் யாருக்கு என்ன பேரம் பேசப்பட்டது? உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். என்னிடம் எத்தனை கோடி பேரம் பேசினீர்கள்? அதற்காக யாரை அனுப்பி வைத்தீர்கள்? நான் வாங்கினேனா, இல்லையா? உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் என்னாலும் சொல்ல முடியும். நேரம் வரும் போது நிச்சயம் சொல்வேன்.
இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் பதவி ஆசைக்காக தர்ம யுத்தம் நடத்தினார் என்று குற்றம்சாட்டுகிறீர்கள். அப்படியெனில் ஆளுநர் உங்கள் இருவரின் கைகளை சேர்த்து பிடித்தாரே? அப்போது உதறி தள்ளி விட வேண்டியது தானே? ஏன் கைகோர்த்தீர்கள். ஒன்றிய அரசு சொல்கிறது. அதனால் செய்தீர்கள். பதவி வேண்டும். அதற்காக செய்தீர்கள்.
89ல் இருந்தே ஜெயலலிதா உடன் நிற்கிறேன். சேவல் சின்னத்திலேயே நின்று வெற்றி பெற்றேன் என்றெல்லாம் கூறி மார் தட்டி கொள்கிறீர்களே? அப்புறம் எதற்காக 2001, 2014, 2016 என மூன்று முறை ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் நாற்காலியை ஜெயலலிதா அளித்தார்கள்? உங்களுக்கு ஏன் தரவில்லை. இதையெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கருணாஸ் கூறினார்.