1. Home
  2. தமிழ்நாடு

தாய் கண்முன்னே நடந்த கோரம்..! மருத்துவமனையில் சேர்த்த 6 மாத குழந்தை துடிதுடித்து பலி...!

1

வேலூரை சேர்ந்தவர் ஜெயந்தி - கார்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. அதில்  மனோஜ் என்ற ஆறு மாத கைக்குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 11ம் தேதி நேற்று தனியார் கிளினிக் அழைத்து சென்றுள்ளனர். முதலுதவி அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அனுமதித்ததில் இருந்தே குழந்தைக்கு குளுக்கோஸ் செலுத்த செவிலியர்கள் முறையாக ஊசி செலுத்தாமல் கழுத்து உட்பட பல இடங்களில் ஊசி குத்தியதாக தெரிகிறது. இதனால் உடலில் இருந்து ரத்தம் வழிந்து குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். பச்சிளம் குழந்தையின் உடலை கையில் ஏந்தி தாய் கதறி அழுத காட்சி காண்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், முறையான சிகிச்சை அளிக்காத அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர்   'குழந்தை மருத்துவமனைக்கு வரும்போது வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்று இருந்த நிலையில்  குளுக்கோஸ் செலுத்த சரியாக நரம்பு தெரியவில்லை. இதனால்  ஒன்றுக்கு இரண்டு முறை ஊசி குத்தப்பட்டது உண்மை தான்.  

அப்போது பணியில் மயக்க மருந்து நிபுணர் இருந்துள்ளார். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதனாலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.  இருந்த போதும் குழந்தை உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்." என தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மருத்துவ இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஆகியோரின் உத்தரவின் பேரில் அணைக்கட்டு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிங்காரவேலன், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து  4 மணி நேர விசாரணைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.  

Trending News

Latest News

You May Like